என்னைப் பற்றி...

Blog Archive

Wednesday, November 3, 2010

பரந்து திரண்ட கறுப்பின் உச்ச வெளி -
இருட்டு பூச்சிகளின் சத்தங்களால் நிறைந்து பிதுங்குகிறது.

அடர்த்தி இருள் திணித்து நீண்டுகிடக்கும்  ஒற்றுச்சாலை,
முகத்தில் சுளீரென்று அப்பி வழியும்  சாரல்,
வழியும் துளிகளில் ஊரும் தவிப்பு,
தவிப்பின் வழி ஊர்ந்து செல்லும் சில்லென்ற நடுக்கம் - என
இவைகளின்  ஊடாய் என்னைப் படர்ந்து  செல்கிறது ஒரு பெருமழை.
... ... செல்லும் மழையின் மர்ம உறுப்புக்கள் என்னை வன்புணர்ந்து செல்கின்றன.
செயலிழந்து கிடக்கும் என் உறுப்பு வழி
முட்டிக்கொண்டு வரும் சிறுநீரை அடக்கி
கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வுகளை பிரசவிக்கிறேன்.
என் பிரசவ வலியின் உச்ச சப்தம் கறுப்பு வெளியின் இருளில் கரைந்துபோகிறது.
அழைக்க அழைக்க முகம் திருப்பி போகிறது ஒற்றை மழை.
மழையினூடே ...
ஓய்ந்து  ஒதுங்கும் ஒற்றைக் குருவி -
ஒரேயொரு பெருமூச்சு
சில்லென்று குளிர்ந்துவிடுகிறது பறவையின் சிறகுகள்.
ஒடுங்கிய சிறகுகளின் வழி சொட்டும்
ஒற்றைத்  துளியின்  நுனியில்
பறவையின் வெப்பமூச்சு நாசி விடைத்து வீழ்கிறது.
மீண்டும்... மீண்டும்...  அழைக்கிறேன்.
தவறும் துளிகள் வழியே.... மீண்டும் அழைத்துப் பார்க்கிறேன்.
கொஞ்சமும் திரும்பாமல்
ஒற்றை தண்டவாளம்  வழி போகிறது ஒற்றை மழை -
சிந்தும் குளிரில்
விலா  முட்டும் மூச்சின் ஓரமாய்
தடம் மட்டுமே மிச்சமாய் மிஞ்சுகிறது.
முகம் கசிந்து திரும்புகிறேன் - 
தொலைவில் பறவை  பறந்து போகிறது 
எச்சமாய்  தடம் கூட எஞ்சவில்லை.
நினைவுக்குள் மழை....
உணர்வு முடிச்சுகள் சில ஈரம் காய்த்து பிசுபிசுப்பாய்
அவிழ்ந்து என் உள்ளடைகளில் ஈரமாகின்றன.
ஈரத்தின் நசனசப்பில் அடிவயிற்றின் சலனமாய்
மழையின் அடர்த்தியில் கசிந்து ஒழுகிய வண்ணம்
அவ்வுணர்வின் நினைவுகள் தன்னிறைவாய் இருள் அப்பிக் கொள்கின்றன.
அருகில் ...என்னவளின் மார்பில் வழியும் பாலை
அரைத்தூக்கத்தில் சப்பி உறிஞ்சும் என் குழந்தையின் முனகல்
உறங்கும்  அவள்  தாய்மையின் நினைவாழத்தில் எதிரொலித்து திரும்புகிறது.
இதில் எனக்கும் அவளுக்குமான உணர்வுகளில் விழும் ஒரு துளி மழை
பெருமழை உறவாய் நினைவு தப்பி பீறிடுகின்றன.
மெல்லக் கடக்கும் இரவின்...
ஆழ்ந்த நித்திரையில் சிதறிவிடும் நினைவு ஒழுக்கங்கள்
கருக்கலில்  ...
என் படுக்கையறை சன்னல் வழி மழையென
கலைந்த  ஆடைகளை இழுத்து போர்த்தி சரிசெய்துகொள்கின்றன.

இவ்வாறு
...பெருகும்  நினைவுகளின் மழைகளில்
நானும் என் விரைய வேக்காடுகளும்
நித்தியதிற்கான நிதர்சனத்தில் கொஞ்சம் கொஞ்சமாய்  கரைந்துபோகிறோம்.
என் மழைத்துளிகளை மெல்ல உன் பாதங்களுக்கடியில்
விரவிவிடுகிறேன்.
கவனமாய் மெல்ல உன் அந்தரங்க கால்பதித்து நடந்து வா!
மிதித்துவிடாதே!
மெல்ல மெல்ல உன் கால் பாதங்களில் என் மழை நிறைவதை பார்!
உணர்...
என் உணர்ச்சிக் குளிர்தலை உணர்ந்துகொள்!
சில்லிடும் உடல் வழி ...
நெஞ்சின் உள்மூச்சுவரை உள்ளிழுத்து சூழ்கொள்!

அதோ அங்கே ...
உன் பெருவிரல்களின் நுனிகளில் கோர்த்துகொள்ளும்
துளிகளின்  கணம் உன் என் காமங்களின் கணம்
அதுவே உனக்கும் எனக்குமான காதலின் தொடக்கம்.
காமமே காதலின் தொடக்கம்!
ஒரு துளி  காமத்தின் பெருக்கமே காதலின் பெருமழை!

மழை துளிகளில் பதியும் உன் பாத அழுத்தம் உன் காதலின் நெருக்கம்.
காமம் கொள்
காதல் கொள்
முற்றிலுமாய் உணர்ந்து போ
இழந்து போ
மீண்டும் மீட்டுகொள்
செத்து போ
மீண்டும் உயிர்த்தெழு
மாறி மாறி ......தொடர்ந்துகொள்!
நிலவின் மொழியாய்
இரவில் என் வீட்டின் தாழ்வாரத்தில்
உன் காலடிச்சந்தங்கள்...

சின்னதாய் இருள் கலந்த அச்சந்தங்களில்
பிறப்பின் ரிஷிமூலம் மெல்ல விலக
உன் துளிகளில் ஒன்று நழுவி
என் தாயின் கருவறைச் சிப்பிக்குள் சூழ் கொள்ள நீயும் நானும்  நீர்த்துப்போனோம்.
மழையே!
சிந்தும் உன் உணர்வுத்  துளிகளில் கசிகிறது... மிச்சமான என்  உணர்வு முடிச்சுகள்!
முற்றத்தின் சன்னலில் தெறிக்கும் உன் சாரல் துளிகளில்
நனைந்து போகிறது
சில உறவுகளும்  உணர்வுகளும்...

என் மனைவியில் தொலைந்த என் காதலின்
ஒரு துளி உற்சவமாய் உன் துளிகளின் புழுக்கம்  
அவள் தாய்மையில்  
இதுவரை இல்லாத குழந்தையாய் மீண்டும்
நான் பிறந்த ஒரு துளி நொடியாய் உன் சாரல் உருக்கம்..

சிதறும்  உன் துளிகளில் 
என் வாழ்கையின் பெருமூச்சு பூக்கள் பூத்து போகின்றன.
ஜில்லென்ற உன் சாரல் நெருக்கத்தில் 
என்னவளோடு  உறங்கும் என் குழந்தையின் உதட்டில் துளிர்த்து வழியும் ஒருத் துளி பால் வழிந்தோடுகிறது.