என்னைப் பற்றி...

Blog Archive

Monday, July 16, 2018

ஊர்க்குருவியின் கவிதைகள் ...


நீர்த்துபோகும் வார்த்தைகள்
புளித்து  போகும்  உணர்வுகள்
மழுங்கிபோகும்  மலிந்த  ரசனைகள் ...
இதன்  மத்தியில்  என்  கவிதை  வரிகள் ...
புகைந்து  போகும்  ஊதுபத்தி ...
கவிதைகளை எழுதி  முடிதிருக்கையில்
வெறும்  சாம்பலாய் மிஞ்சிவிடுகிறது ... பீனிக்ஸ்  பறவையை மீதமாய்  விட்டு  விட்டு ...

எழுதி  எழுதி  நான் பிரசவித்த  பின்
அவற்றை  அறிவியல்  கூடமாக்கி ஆராயும் 
வாசிப்பவனின்   உணர்வுகளில்
என்  வார்த்தைகள்  சிதைந்து  
உருமாரிப்போகின்றன
இதில்  மறுபிறப்பு  கொடுத்ததாய்   அவனின்  பெருமிதம் ...
அதற்கு  மேலும்  நீண்டுவிடும்  அவனின்  சிலாகிப்பு
கொஞ்சம்  கொஞ்சமாய்  என்னை  அவமானப்படுத்துகிறது 
சூடு  கண்ட  பூனை  வெற்று பாத்திரத்தை  உருட்டி அலைகிறது  
என் கவிதை  அறைகளில் ...

இத்தனைகுமான  பிண்ணனியில்
தொடரும்  என்  கவிதைகள்
பாரந்த  வெளியில்  கூவித்திரியும்  ஊர்க்குருவியாய்
நிறைந்து  வழிகிறது ..
வெட்ட  வெளிக்கு  பழகியவன்  காதுகளுக்கு
அவை  தப்பி  போகின்றன ..

Saturday, July 2, 2011

கறுப்பு மழை

புதியதாய் இருக்கிறது இந்த மழை!
கறுப்பாய்.. கவிச்சை வாடையுடன்....
வீச்சம் கொண்டு பெய்ய துவங்குகிறது.
தோல்களின் வழி உள் உறுப்புகளில்
கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து நிறைகிறது.
நிறைதலின் உச்சமாய் என்னையறியாமல் உடல் விரைத்து நடுக்கமுற
...ஈனக்குரலில் முனகுகிறேன்... பிதற்றுகிறேன்.. உளறுகிறேன்.
மெல்ல மெல்ல உடலின் குளிர்தலில் மனம் மூச்சடைத்து சூடேறுகிறது.
துளிகள் ஒவ்வொன்றிலும் என் ஆண்மையை நிறைத்து
சூழ் கொண்டு பின் விழுந்து சிதறுகிறது மழை.
...விடாது சூழ்கொள்ளும் அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல்
துவண்டு இருள்கிறது வானம்.
'விடாது கறுப்பு' என்பதாய் இருளோடு இருளாய் பெய்கிறது கறுப்பு மழை!
தொடர்ந்து தொடர்ந்து இருளை இன்னும் கறு(ரு)மையாக்குகிறது.
மழையும் இருளும் நெருக்கத்தை கறுமையாய் வடிகட்டுகின்றன.
இருவரும் பிணைந்து வெப்பமாய் மூச்சிடுகின்றன.
இவர்களின் மூச்சின் வேகம் எழுப்பும் சத்தம் அச்சமூட்டுவதாய்
அண்டை வீட்டிலுள்ளோர் வேக வேகமாய் கதவடைக்கின்றனர்
அனைவரும் கதவடைத்த பின் அதீத உக்கிரத்துடன் ஓவென்று பெய்கிறது கறுப்பு மழை!

Wednesday, April 20, 2011

முன்னொரு இரவில் பெய்த
அடர்த்தி மழையில்
எனக்கும் உனக்குமான அரிதாரங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
கரைந்து நழுவிக் கொண்டிருக்கின்றன.

நெருக்கமான நேரங்களில் மட்டுமே
அவை கரைய தொடங்கும் காரணம்
இதுவரை பிடிபடவில்லை.

இருந்தும் நெருக்கமாய் நெருங்கி கொள்கிறோம்
நெருங்கி நெருங்கி... கசங்கிப்போகிறோம்.

கசங்கிய உறுப்புகளிளெல்லாம்
அரிதாரம் கரைந்த மனம்
பாதி கரைந்தும் பாதி கரையாமலும்
அப்பிகிடக்கிறது...
இருந்தும் இருவரும் லயித்து கிடக்கிறோம்.

நடுமுதுகின்
தண்டுவடத்தின் வழி
ஊர்ந்து சர்ப்பமென
கீழிறங்கும் என் கவிச்சை வெளியை
உன் கவிச்சை வெளிக்குள்
திணித்து திணித்து சோர்ந்துபோகிறேன்...
ஆனால்...
இரவின் நீட்சி மட்டும் சோர்வடையவில்லை.

கறுப்பு இரவில்
அடர்த்தியாய் கரைந்து நழுவும்
அரிதார வண்ணங்களின் வழி
நிறைந்திடும் நிறமாலைகளை
அள்ளி அள்ளி முகத்தில்
அப்பியவாரே
நம் பிள்ளைகளுக்கான
வாழ்வியல் முறைமைகளை
தடம்பதியக் கிடத்துகிறோம்.

இனியும்
இதுபோல்..
காலம் காலமாய்..
யுகம் யுகமாய்...
பல பல இரவுகளாய்
நித்திய யோக நிலையாய்
தொடரச் செய்த நம் முன்னோர் வழி
வழிந்து மீளுகிறது..
இப்புனித இரவுக்கான கறுப்பு மழை.

Saturday, February 5, 2011


எல்லாவற்றையும்  அலட்சியம்  செய்யும் 
அவள்   உணர்வுகளில்  உசலாடுகிறது 
எந்தன்  மழை  துளிகள்.
உசாலாடும் துளிகளில் ஒன்றிரண்டை
உதிர்ந்துவிடும் முன்
மெல்லப் பிரித்து கோர்த்து  முடிகிறாள்  தன்
இறுக்கமான  உணர்வு  நரம்புகளில்.

துளிகள் ஒவ்வொன்றும்
கணங்கள்  கடக்க  கனமேறுகின்றன.
என்  மழை  துளிகளின்  கணம்
இன்றுபோல்  என்றும்  இருந்ததில்லை.

தவறி விழுந்துவிட  எத்தனிக்கும்  நிலையில் 
நிரம்பி  நிற்கின்றன  மழைத்துளிகள் 
இன்னும்  ஒரு  துளி  தேங்கினால் 
தாங்காது  …. இருந்தும்  நீள்கிறது   அவளின்  இறுக்கமான   கோர்ப்பு !

Wednesday, November 3, 2010

பரந்து திரண்ட கறுப்பின் உச்ச வெளி -
இருட்டு பூச்சிகளின் சத்தங்களால் நிறைந்து பிதுங்குகிறது.

அடர்த்தி இருள் திணித்து நீண்டுகிடக்கும்  ஒற்றுச்சாலை,
முகத்தில் சுளீரென்று அப்பி வழியும்  சாரல்,
வழியும் துளிகளில் ஊரும் தவிப்பு,
தவிப்பின் வழி ஊர்ந்து செல்லும் சில்லென்ற நடுக்கம் - என
இவைகளின்  ஊடாய் என்னைப் படர்ந்து  செல்கிறது ஒரு பெருமழை.
... ... செல்லும் மழையின் மர்ம உறுப்புக்கள் என்னை வன்புணர்ந்து செல்கின்றன.
செயலிழந்து கிடக்கும் என் உறுப்பு வழி
முட்டிக்கொண்டு வரும் சிறுநீரை அடக்கி
கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வுகளை பிரசவிக்கிறேன்.
என் பிரசவ வலியின் உச்ச சப்தம் கறுப்பு வெளியின் இருளில் கரைந்துபோகிறது.
அழைக்க அழைக்க முகம் திருப்பி போகிறது ஒற்றை மழை.
மழையினூடே ...
ஓய்ந்து  ஒதுங்கும் ஒற்றைக் குருவி -
ஒரேயொரு பெருமூச்சு
சில்லென்று குளிர்ந்துவிடுகிறது பறவையின் சிறகுகள்.
ஒடுங்கிய சிறகுகளின் வழி சொட்டும்
ஒற்றைத்  துளியின்  நுனியில்
பறவையின் வெப்பமூச்சு நாசி விடைத்து வீழ்கிறது.
மீண்டும்... மீண்டும்...  அழைக்கிறேன்.
தவறும் துளிகள் வழியே.... மீண்டும் அழைத்துப் பார்க்கிறேன்.
கொஞ்சமும் திரும்பாமல்
ஒற்றை தண்டவாளம்  வழி போகிறது ஒற்றை மழை -
சிந்தும் குளிரில்
விலா  முட்டும் மூச்சின் ஓரமாய்
தடம் மட்டுமே மிச்சமாய் மிஞ்சுகிறது.
முகம் கசிந்து திரும்புகிறேன் - 
தொலைவில் பறவை  பறந்து போகிறது 
எச்சமாய்  தடம் கூட எஞ்சவில்லை.
நினைவுக்குள் மழை....
உணர்வு முடிச்சுகள் சில ஈரம் காய்த்து பிசுபிசுப்பாய்
அவிழ்ந்து என் உள்ளடைகளில் ஈரமாகின்றன.
ஈரத்தின் நசனசப்பில் அடிவயிற்றின் சலனமாய்
மழையின் அடர்த்தியில் கசிந்து ஒழுகிய வண்ணம்
அவ்வுணர்வின் நினைவுகள் தன்னிறைவாய் இருள் அப்பிக் கொள்கின்றன.
அருகில் ...என்னவளின் மார்பில் வழியும் பாலை
அரைத்தூக்கத்தில் சப்பி உறிஞ்சும் என் குழந்தையின் முனகல்
உறங்கும்  அவள்  தாய்மையின் நினைவாழத்தில் எதிரொலித்து திரும்புகிறது.
இதில் எனக்கும் அவளுக்குமான உணர்வுகளில் விழும் ஒரு துளி மழை
பெருமழை உறவாய் நினைவு தப்பி பீறிடுகின்றன.
மெல்லக் கடக்கும் இரவின்...
ஆழ்ந்த நித்திரையில் சிதறிவிடும் நினைவு ஒழுக்கங்கள்
கருக்கலில்  ...
என் படுக்கையறை சன்னல் வழி மழையென
கலைந்த  ஆடைகளை இழுத்து போர்த்தி சரிசெய்துகொள்கின்றன.

இவ்வாறு
...பெருகும்  நினைவுகளின் மழைகளில்
நானும் என் விரைய வேக்காடுகளும்
நித்தியதிற்கான நிதர்சனத்தில் கொஞ்சம் கொஞ்சமாய்  கரைந்துபோகிறோம்.